top of page
Temple Name
Town/Village
District
State
Sthalam Specialty
Festivals
Route
Archaka

ஸ்ரீரங்கநாயகி ஸமேத ரங்கநாத ஸ்வாமி

பள்ளிகொண்டா

வேலூர்

தமிழ்நாடு

இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் நாரதர், பிருகு மகரிஷிக்கு இரண்டு அத்தியாயங்களாகக் கூறப்பட்டுள்ளது. காஞ்சி மகாத்மியத்திலும், ஹஸ்தகிரி மகாத்மியத்திலும் சொல்லப்பட்டுள்ளது என பள்ளிகொண்டை எனும் உத்திரரங்கஷேத்திர புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பள்ளிகொண்டா ரங்கநாதரைத் தரிசித்து மகிழ்ந்த பிரம்மா, யாகம் செய்ய விரும்பினார். அதற்கான இடத்தைத் தேடினார். முடிவில் வேறு இடங்களில் நூறு யாகங்கள் செய்வதைவிட, சத்யவிரத ஷேத்திரம் எனும் காஞ்சீபுரத்தில் செய்வதே சாலச் சிறந்தது என்று தீர்மானித்தார். இந்த நிலையில் சரஸ்வதிக்கும், லட்சுமிக்கும் தங்களுள் யார் பெரியவர்? என்ற போட்டி ஏற்பட்டது. இதற்கான பஞ்சாயத்து பிரம்மாவிடம் வந்தது. பிரம்மா, லட்சுமியே உயர்ந்தவள் என்று கூறினார். கோபம் கொண்ட சரஸ்வதி அங்கிருந்து, மேற்கேயுள்ள நந்திதுர்க்க மலைக்குச் சென்றாள். ஆனால் காஞ்சீபுரத்தில் தான் செய்யவிருக்கும் யாகத்திற்கு, தம்பதி சமேதராய் செல்ல வேண்டும் என்பதால் சரஸ்வதியை அழைத்தார் பிரம்மா. ஆனால் அவர் உடன் வர சம்மதிக்கவில்லை. எனவே, சாவித்திரி என்ற பெண்ணை உருவாக்கி, அவளை மணம்புரிந்து யாகத்தைத் தொடங்கினார் பிரம்மா. இதைக் கேள்வியுற்ற சரஸ்வதி, பெரும் வெள்ளமாகப் பெருக்கெடுத்து, ஷீர நதி எனும் பாலாற்றில் பாய்ந்து, யாகத்தை அழிக்க முற்பட்டாள். இதையறிந்த பிரம்மா ஸ்ரீமன் நாராயணனிடம் தஞ்சம் புகுந்தார். அவரது வேண்டுதலுக்கு செவிசாய்த்த பெருமாள், பள்ளிகொண்டா, திருப்பாற்கடல், காஞ்சீபுரம் என மூன்று இடங்களில் பாலாற்றை வழிமறித்து வெள்ளத்தைத் தடுத்து, பிரம்மாவின் யாகத்தைக் காத்தருளினார். பள்ளிகொண்டாவில் சயனம் செய்த பெருமாள், பள்ளிகொண்டான் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார். சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளை ஸ்ரீவில்லிபுத்தூரில் மணம் புரிந்ததுபோல, பள்ளிகொண்டாவில் சம்பாதிமுனிவர் விருப்பப்படி, செண்பகவல்லி என்ற பக்தையை பங்குனி உத்திர நாளன்று திருமால் மணம் புரிந்ததாக தல புராணம் கூறுகிறது. கல்வெட்டுகள் : 1925-ம் ஆண்டு இந்தியத் தொல்லியல்துறை ஆய்வறிக்கையின்படி, இத் தலத்தை பற்றிய 22 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 18 கல்வெட்டுகள் உத்திர ரங்கநாதர் ஆலயத்திலும், மூன்று கல்வெட்டுகள் நாகநாதீஸ்வரர் கோவிலிலும், ஒரு கல்வெட்டு செல்லியம்மன் கோவிலிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டுகள் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.848), முதலாம் பராந்தகன் (கி.பி.926), முதலாம் ராஜராஜன் (கி.பி. 985), முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012), இரண்டாம் ஜடாவர்மவீரப் பாண்டியன் (கி.பி.1306), குலசேகரசம்புவராயன் (கி.பி.1307) போன்ற மன்னர்களின் கொடைகளையும், நிலதானங்களையும் எடுத்துரைக்கிறது. ஆலய அமைப்பு : பாலாற்றின் தென்கரையில், கிழக்கு முகமாய் அமைந்துள்ளது இந்த ஆலயம். ஐந்து நிலை ராஜகோபுரம், அதன் எதிரில் நான்கு கால் ஊஞ்சல் மண்டபம், இடது புறம் வியாசர் புஷ்கரணி என அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன. இரண்டு திருச்சுற்றுக்களைக் கொண்டதாக அமைந்துள்ள கோவில் கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பலி பீடம் காட்சியளிக்கின்றன. இதனையடுத்து மகாமண்டபம், அர்த்த மண்டபம் உள்ளன. வெளிச்சுற்றில் ராமானுஜர், ராமர், கண்ணன், ஆண்டாள், தலமரங்களான பாதிரி, பாரிஜாதம், கருடாழ்வார், எம்பெருமான் திருவடி, சொல்லின் செல்வனான வீர அனுமன் அருகே பக்த அனுமன், மணவாளமாமுனிகள் ஆகியோருக்குத் தனித்தனி சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன. மகாமண்டபத்தில் இடதுபுறம் உற்சவமூர்த்திகள் 12 ஆழ்வார்களும் திருமுகம் சாதிக்கின்றனர். இது தவிர, பிள்ளைலோகாச்சார்யார், முதலியாண்டான், மணவாளமாமுனி, ஆளவந்தார், நவநீதகண்ணன் ஆகிய திருமேனிகள் கலைநயத்துடன் காட்சி தருகின்றன. இதில் கண்ணன் திருமேனி மிகவும் கலை அம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. மூலவர் பள்ளிகொண்ட பெருமாள், தெற்கே தலை வைத்து, வடக்கே தன் திருப்பாதங்களைக் காட்டி, பாம்பணையின் மீது எழிலாகப் பள்ளிகொண்டுள்ளார். அவரின் திருமார்பில் திருமகளும், கொப்பூழ் தாமரையில் நான்முகனும், அருகே ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்துள்ளனர். எம்பெருமானின் திருக்கரம் பக்தர்களை ‘வா’ என்று அன்போடு அழைக்கும் கோலத்தில் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் அதேப் பொலிவுடன் எம்பெருமான் காட்சி தருகின்றார். தாயார் ரங்கநாயகி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அழகுற அருளாசி வழங்குகிறாள்.

வேலூர் மாவட்டம், வேலூர் வட்டத்தில் பாலாற்றின் தென்கரையில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. தெற்கே பீஜாசலம் எனும் வித்துமலை இருக்கிறது. சென்னைக்கு மேற்கே 150 கிலோமீட்டர், வேலூர் - குடியாத்தம் வழித்தடத்தில், வேலூருக்கு மேற்கே 23 கிலோமீட்டர், ஆம்பூருக்கு கிழக்கே 25 கிலோமீட்டர், குடியாத்தத்திற்குத் தென்கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில், பள்ளிக்கொண்டான் ஆலயம் உள்ளது.

ஹேத்திராஜன் .ஜா

9962255142

Google Map

© Shri Vaikhanasa Bhagavad Sastra Pathasala

bottom of page